1. அகட்டு வாய்வு அகற்றி
(உதரவாதஹரகாரி )
Carminative
இரைப்பையிலும் அதனோடு தொடர்பான குடலில் ஏற்படுகின்ற தீங்கு விளைவிக்கின்ற காற்றை நீக்கி (வயிற்றுப் பொருமல் ) வேதனையைக் குறைக்கும் மருந்துப் பொருட்களை அகட்டுவாய்வு அகற்றி என அழைக்கலாம்.
The Drug used for expulsion of gas from the stomach and intestine thereby relieves pain and flatulence.
முக்கிய மூலிகைகள்
இஞ்சி
ஏலம்
சுக்கு
மிளகு
பெருங்காயம்
வெள்ளைப்பூண்டு
இலவங்கம்
கராம்பு
சாதிக்காய் புதினா
திற்பலி
ஓமம்
சீரகம்
உபயோகிக்கும் முறை :
இஞ்சி :
5 கிராம் இஞ்சி எடுத்து புறத்தோல் சீவி துப்புரவு செய்து பசுப்பால் சிறிது விட்டரைத்து 20 மி.லி. பசுப்பாலில் கலந்து காலை, மாலை இரு வேளை சாப்பிட்டுவர வயிற்றிலுள்ள வாய்வு நீங்கும். வயிற்று மந்தம் நீங்கி, பசியுண்டாகும். இது ஒரு கற்ப மூலிகையாகும்.
ஏலம் :
ஏலரிசித்தூள் 15கிராம் எடுத்து வாயில் போட்டு, நற்சீரகம் ஊறிய நீர் 30 மி. லி. மூன்று வேளை அருந்திவர வயிற்றுவலி, செரியாமை, பசிமந்தம் ஆகியன தீரும்.
சுக்கு :
சுக்கினைப் பொடித்து வைத்துக் கொண்டு அதில் மூன்று விரல் அளவுப் பிரமாணப் பொடியை, 170மி.லி. உடனே கறந்த பசுப் பாலில் ( தாரோட்டம் ) கலந்து தினம் ஒரு வேளை குடித்துவரப் பசியுண்டாகும்.
மிளகு :
மிளகுத் தூள் 50 கிராம் எடுத்து, 700 மி.லி. நீரில் போட்டு ஊறவைத்து, பின் அடுப்பேற்றி காய்ச்சி கால் பங்காகக் குறுக்கி எடுத்து அதில் 30-60 மி.லி. தினம் இரு வேளை குடித்துவர தொண்டைக் கம்மல், தொண்டைப்புண், வயிற்று நீங்கும்.
"பத்து மிளகு வீட்டில் இருந்தால் பக்கத்து வீட்டுப் பகைவனிடமும் சாப்பிடலாம்" என்ற வாசகத்தை இங்கு நினைவுகூருதல் நன்று.
பெருங்காயம்:
சுக்கு, மிளகு, திற்பலி, ஓமம், நற்சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு இவைகளைச் சம எடை யாக எடுத்து, அவற்றிற்கு கால் பங்கு பெருங்காயம் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொண்டு, அதனில் 300-600 மி.கிராம் எடை அளவு சோற்றுடன் முதற் பிடியாக உண்டுவர பசியும், சீரணமும் உண்டாகும்.
அத்துடன் வயிற்று உப்புசம், மந்தம் நீங்கும். பெருங்காயச் சத்து 2 துளியை 30 மி.லி. நீரில் கலந்து குடித்துவர பசியுண்டாகும்.
வெள்ளைப் பூண்டு ! வெள்ளுள்ளி, மிளகு, கையாந்தகரை இலை ஆகியன சம எடையாக எடுத்து அரைத்து உண்டு வர வயிற்றுப்புசம் நீங்கும்.
வெள்ளுள்ளியைத் தணலில் போட்டுச் சுட்டு உண்டுவர வயிற்றில் உள்ள வாய்வுக் கோளாறுகள் நீங்கும்.
இலவங்கம், கராம்பு :
இலவங்கப் பட்டை, பெருஞ்சீரகம், சுக்கு, வாய்விடங்கம், கராம்பு வகைக்கு 5 கிராம் எடுத்து குடிநீர் செய்து கால் பங்காகச் சுருக்கி வடித்தெடுத்து 15-30 மி.லி. தினமும் இரு வேளை குடித்துவர வயிற்றுவலி, குன்மம் தீரும்.
சாதிக்காய்;
சாதிக்காய் 130 கிராம்
சுக்குத் தூள் 130 கிராம்
நற்சீரகம் -325 கிராம்
இவற்றை எடுத்துப் பொடித்து, அதில் 1 - 2 தேக் கரண்டி வீதம் உணவுக்கு முன், தினமும் ஒரு வேளை உண்டுவர வயிற்றில் உண்டாகும் வாயுவைப் போக்கிச் செரிமானத்தை உண்டுபண்ணும்.
புதினாக் கீரை :
இதில் சிறிதளவு எடுத்துத் துப்புரவு செய்து பின்னர் அதனை நன்கு அரைத்து நீரில் கலந்து உட்கொள்ள வயிற்றுவலி நீங்கி, பசியை உண்டு பண்ணும்.
திற்பலி :
அரிசித்திற்பலியைப் பொடித்து, சர்க்கரை கலந்து வேளைக்கு ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை உட்கொள்ள வயிற்று உப்புசம் தீரும்.
ஓமம் :
ஓமம் 30 கிராம், மிளகு 30 கிராம் இவை இரண்டையும் வெதுப்பி 30 கிராம் வெல்லத்துடன் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு பத்து நாட்களுக்கு உண்டுவர வயிற்றுப்பொருமல் நீங்கும்.
சீரகம் :
நற்சீரகத்தைப் பொடித்து அதனுடன் சம அளவு சீனி கலந்து, அதனில் மூன்று கிராம் அளவு தினமும் இருவேளை உண்டுவர வயிற்றுப் பொருமல், எரிவு நீங்கும்.